வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் அதிபர் ,ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று வரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் இன்று பிரபல பாடசாலையின் அதிபர் ஒருவருக்கு தடுப்பூசி இரகசியமாக செலுத்தப்பட்டுள்ளது.
இது எவ்வாறு சாத்தியமாகியுள்ளது என்ற கேள்விகளையும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இவ்வாறு பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருவதையும் இச்சம்பவம் அம்பலப்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் முறையிட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் அண்மையில் இராணுவத்தினரினால் ஆயிரம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டு அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், மேலும் பலருக்கு செலுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் தபால் நிலைய ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.
எனினும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை எவையும் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில், இன்றைய தினம் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஓமந்தையில் பிரபல்யமான பாடசாலையின் அதிபர் ஒருவருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நடவடிக்கை வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருகின்றமை அம்பலத்திற்கு வந்துள்ளது.
எவ்வாறு பாடசாலையின் அதிபர் ஒருவருக்கு தன்னிச்சையாக செலுத்தப்பட்டுள்ளதென்ற கேள்வியையும் அதிகாரியின் சிபார்சு இல்லாமல் போட்டிருக்க முடியுமா? என்ற பலத்த சந்தேகத்தையும் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளதாகவும் , இதனுடன் தொடர்புபட்டுள்ள அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.