வவுனியா – குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் நால்வர் அடங்கிய குடும்பத்தினர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
வவுனியாவில் மர்மமான முறையில் உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கான சட்டவைத்திய பரிசோதனை நேற்றைய தினம் (8) இடம்பெற்றிருந்தது.
இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் முடிவில் உடலில் நஞ்சருந்தியதற்கான ஆதாரங்கள் எதுவும் இருக்கவில்லை எனவும் உயிரிழந்தவர்களினது
இரத்தம், சிறுநீர் மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் மர்மம்
இந்த மாதிரிகளுக்கான பரிசோதனை முடிவு வந்ததன் பின்னரே மரணத்திற்கான காரணம் தொடர்பான தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியும் எனவும் சட்டவைத்திய பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா குட்செட்வீதி, உள்ளகவீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் பொலிஸாரால் நேற்று முன்தினம் (7) மீட்கப்பட்டிருந்தது.
குறித்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் (வயது 42), வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான கௌ.வரதராயினி (வயது 36), இருபிள்ளைகளான கௌ.மைத்ரா (வயது9) , கௌ.கேசரா (வயது3) ஆகியோர் உறங்கியபடியும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியா பொலிஸார் மீட்கப்பட்ட சடலங்களை சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது