வவுனியா – குடியிருப்புகுள வீதியில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் இருந்து, பெருமளவான காலாவதியான மருந்துகள் அதிகாரிகளால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
வவுனியாவைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில், நேற்று (12), குறித்த வைத்தியசாலைக்குச் சென்று சிகிற்சை பெற்று மருந்துவாங்கிச் சென்றுள்ளார். இதனையடுத்து அந்த மருந்தை நேற்றைய தினம் இரவு, அவர் பயன்படுத்திய நிலையில், உடல்நிலை மோசமடைந்ததுடன் , உடலில் சில மாற்றங்களையும் அவதானித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த மருந்துகளை சோதித்து பார்த்த போது, அவை, ஒரு மாதத்துக்கு முன்பாகவே காலாவதியாகி உள்ளதை அவதானித்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின்னர், இன்றைய தினம் (13) காலை, குறித்த வைத்தியசாலைக்குச் சென்ற அவர், அங்கு கடமையில் இருந்தவர்களிடம் விடயத்தைத் தெரியப்படுத்தி நியாயம் கோரியுள்ளார்.
அங்கிருந்த பணியாளர் காலாவதியான மருந்தை மூன்று மாதங்களுக்குப் பயன்படுத்தலாம் என தெரிவித்த நிலையில், பாதிக்கப்பட்டவர் சம்பவம் தொடர்பாக, மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முறைப்பாடு வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பாவனையாளர் அதிகாரசபையின் அதிகாரிகள், விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் காலாவதியான சில மருந்துகளையும் மீட்டுள்ளனர்.
மேலும், குறித்த வைத்தியசாலைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம், பொதுமக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் , இவ்வாறான அலட்சியமான சம்பவங்களால் ஏற்படும் பாதிப்புகள் மேலும் தொடராமல் இருப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.