தமிழர்களிற்கு எதிரான மோதலுடன் தொடர்புடைய பெண்கள் மீதான தகாத வன்முறைகளில் ஈடுபட்டவர்களை , குற்றவாளிகளை தண்டிப்பதற்கு இலங்கை தவறிவிட்டதாக அமெரிக்காவை தளமாக கொண்ட பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான அமைப்பு (பேர்ள்) தனது புதிய அறிக்கையில் இலங்கையில் மோதல் தொடர்பான தகாத வன்முறைகளில் ஈடுபட்டவர்களை அரசாங்கம் எவ்வாறு தண்டிக்க தவறிவிட்டது என்பதை ஆராய்ந்துள்ளது.
தமிழ் மக்களிற்கு எதிரான வன்முறை உட்பட ஏனைய சர்வதேச குற்றங்கள் இடம்பெற்றன என்பதற்கான நம்பகதன்மை மிக்க ஆதாரங்கள் உள்ள போதிலும் குற்றவாளிகளிற்கு எதிராக இலங்கை சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கையில் அரிதாகவுள்ள நீதி
அந்த பலாத்காரத்திலிருந்து உயிர் தப்பியவர்கள் மற்றும் வன்முறைகளிற்குள்ளானவர்களின் குடும்பத்தவர்கள் அரசியல்மயப்படுத்தப்பட்ட நீதிமன்றங்களிடமிருந்து அரிதாகவே நீதியை பெற்றுக்கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட தமிழர்களை காட்டிலும் பாதுகாப்பு படையினரையே விசேடமாக பாதுகாக்க நினைக்கும் இலங்கையின் ஜனாதிபதிகளின் முன்மாதிரியை நீதிமன்றங்கள் பின்பற்றுகின்றதாகவும் பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிகளவு இராணுவமயப்படுத்தப்பட்ட சூழலில் வாழும் தமிழ் யுவதிகள் பெண்கள் வன்முறை துஸ்பிரயோகம் துன்புறுத்தல் போன்ற ஆபத்தை அதிகம் எதிர்கொள்கின்றனர் எனவும் அமெரிக்காவை தளமாக கொண்ட அமைப்பு தெரிவித்துள்ளது.
வன்முறையின் பின்னர் உயிர் தப்பிய தமிழர்களும் வன்முறையின் பின்னர் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்களும் பழிவாங்குதல் குறித்த அச்சம் இலங்கையின் நீதித்துறையில் நீடிக்கும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தல் ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர் என பேர்ளின் நிறைவேற்று இயக்குநர் அர்ச்சனா ரவீந்திரதேவ தெரிவித்துள்ளார்.
சர்வதேசநீதி மாத்திரமே ஒரேயொரு பரிகாரம்
மோதல் தொடர்பான குற்றங்கள் மற்றும் பிற சர்வதேச குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களிற்கும் உயிர் தப்பியவர்களிற்கும் சர்வதேசநீதி மாத்திரமே ஒரேயொரு பரிகாரமாக உள்ளது.
எனவே சர்வதேச சமூகம் மேலும் தடுமாறவோ அல்லது வழக்குகளை தாமதப்படுத்தவோ கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையில் யுத்தத்துடன் தொடர்புடைய பென்கள் மீதான வன்முறைகள் மற்றும் ஏனைய குற்றங்களை விசாரணை செய்வதற்கு அரசாங்கம் தயாராகயில்லாததையும் பேர்ள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.