சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் கரைசல் அடங்கிய 4 பொதிகளை தனது அந்தரங்கப் பகுதியில் மறைத்து வைத்து கடத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயற்சித்த, கட்டுநாயக்க தீர்வையற்ற கடைத்தொகுதி ஒன்றின் பெண் ஊழியர் ஒருவரே இன்று செவ்வாய்க்கிழமை (04) காலை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான 24 வயதுடைய இந்த யுவதி கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத் தீர்வையற்ற வர்த்தக வளாகத்தில் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணிபுரிபவராவார்.
இன்று காலை 8.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 5 கிலோவுக்கும் அதிகமான தங்க ஜெல் அடங்கிய 4 பொதிகளை தனது அந்தரங்கப் பகுதியில் மறைத்து வைத்து வெளியேற முயன்றபோதே யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவினரால் கைதான யுவதி மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.