பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும், இணையத்தளங்களிலும் யுவதிகளின் தகாத படங்கள், ஆபாச வீடியோக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை பொலிஸ் கணினி குற்றப்பிரிவு கடந்த வாரம் கைது செய்ததாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹானா தெரிவித்தார். இந்நிலையில் இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பெண்களின் தகாத படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடும் போக்கு அதிகரித்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண சுட்டிக்காட்டினார்.
பெண்களுடன் டேட்டிங் செய்யும் போது எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை, உறவு முறிந்த பின்னர் சமூக ஊடகங்கள், இணையத்தளங்களில் பதிவேற்றும் சம்பவங்களே அதிகமாக உள்ளதாகவும், இவ்வாறானவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பெண்களுடன் உறவில் இருந்து விட்டு, அவர்களின் உறவு முறிந்ததும் படங்களை பதிவிட்ட புறக்கோட்டை, ராஜகிரிய, கண்டி, பிலியந்தலை, கம்பஹா பகுதிகளை சேர்ந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 23, 26, 31, 39 வயதுக்குட்பட்ட நான்கு பேர், சமூக ஊடகங்களில் பெண்களின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை ஒருவரின் பேஸ்புக் கணக்கிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து ஆபாச படங்களை பதிவிட்டதுடன், செய்திகளை அனுப்பிய 31 வயதான ஒருவரும் கைதானார்.