யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராகப் பல்கலைக்கழக சிரேஷ்ட பெண் விரிவுரையாளர் ஒருவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் முன்னாள் தலைவர் திருமதி துஷானி சயந்தன், பல்கலைக் கழகச் சட்டத்துக்கு விரோதமான முறையில் நிதியாளர் தனது சம்பளத்தை நிறுத்தியதனால் தனது வாழ்வாதாரம் சவாலுக்குட்டபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏழாண்டு விடுமுறையை நிறைவு செய்து கொண்டு குறிப்பிட்ட திகதியில் தான் கடமைக்குத் திரும்பிய போதிலும் தனக்கு அரைமாதச் சம்பளத்தை வழங்கி விட்டு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குத் தனது வாழ்வாதாரத்தைச் சவாலுக்குட்படுத்தும் வகையில் தனது சம்பளத்தை நிறுத்தியமை தவறு என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்பாணப் பிராந்திய அலுவலகத்தில் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்பாணப் பிராந்திய அலுவலகம் முன்னெடுத்துள்ளது.
அதேவேளை பல்கலைக்கழக நிதியாளர் , வருமான வரி முன்மொழிவின் போது பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்ற பல வருமானத்தை மறைத்து வரிஏய்ப்புச் செய்துள்ளார் எனக் கைதடியைச் சேர்ந்த கே. சிவரஞ்சன் என்பவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.