யாழ்ப்பாணம் ஆரியகுளத்தின் நடு மத்தியில் ‘இந்து – பெளத்த மண்டபம்’ என்ற பெயரில் பெளத்த சின்னங்களையும் உட்புகுத்தி, ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரின் இந்த நடவடிக்கைக்கு யாழ் மாநகர சபையின் அனுசரணையையும் அவர் கோரியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இது தொடர்பில் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன், வெளிப்படையாக செயற்படவில்லைஎன குற்றச்சாட்டுகள்முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் அவர் வேண்டும் என்றே மறைப்பதாகவும், , அவரது ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்த ஆரியகுளம் புனரமைப்புத் திட்டத்தின் கடைசிக் கட்டத்தில் இந்த மண்டப அமைப்பும் இடம் பெறலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிற்குத் தாம் எழுதிய கடிதத்தில், இந்த ஆண்டு இடம்பெறவிருந்த அரச வெசாக் நிகழ்வில் இக்குளத்தின் மத்தியில் இந்து – பெளத்த நல்லிணக்க மண்டபம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது என விகாராதிபதி வண.மீஹாஹயண்துர ஸ்ரீவிமல தேரர் குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே இந்த மண்டபத்தை அமைப்பதற்கு யாழ். மேயர் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கோரியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மாநகர முதல்வருக்கு முகவரியிடப்பட்ட இக்கடிதம் கிடைத்ததும் அதன் முக்கியத்துவம் கருதி “இவ்விடயத்தை சபையில் சமர்ப்பிப்பதே பொருத்தமானது. எனினும் அடுத்த சபைக் கூட்டத்தில்’ என்ற பரிந்துரையுடன் அதை யாழ். மாநகர ஆணையாளர், மேயருக்கு அனுப்பி வைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் “இதனை(கடிதத்தை) கோவையில் சேர்க்க’ என்று பணித்து, விடயத்தை நகர மேயர் மணிவண்ணன் மறைத்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அது மட்டுமல்ல, இது குறித்து மாநகர சபையின் கூட்டத்தில் தெளிவாக விடயத்தைக் குறிப்பிட்டு எதிரணியால் கேள்வி எழுப்பப்பட்டபோது, ஆரியகுளத்தினுள் எந்தவொரு பெளத்த அடையாளத்தையும் அமைத்துத் தரு மாறு நாக விகாரையின் விகாராதிபதிகேட்கவேயில்லை என மேயர் மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.