கைப்பேசியில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் போயிருந்த குடும்பத்தலைவர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய இளம் குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரை தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் கடந்த 2 வாரங்களுக்குள் இரண்டாவது நபர் கைப்பேசியில் இணையவழி போர் விளையாட்டில் ஈடுபட்டு இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“நேற்றிரவு படம் பார்த்துவிட்டு தூக்கத்துக்குச் சென்றோம். காலையில் எழுந்து பார்த்த போது, கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். எப்போதும் பப்ஜி விளையாடுவதில் ஆர்வமாக இருப்பார்.
வேறு பிரச்சினைகள் அவருக்கு இருக்கவில்லை” என்று மனைவி வாக்குமூலம் வழங்கியுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் சடலம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த மாத இறுதியில் இளவாலையைச் சேர்ந்த இளைஞன் இதே போன்ற காரணத்தினால் தற்கொலை செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.