யாழ்ப்பாணம் நெல்லியடி நகரிலுள்ள எரிபொருள் நிலையத்தில், நிர்வாகத்தினரிடம் சிக்காமலிருப்பதற்காக, கண்காணிப்பு கமராவில் பிளாஸ்ர் ஒட்டி மறைத்து விட்டு தூங்கிய ஊழியர்களிடமிருந்து பணம், கைத்தொலைபேசி என்பன திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு அண்மையக உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இந்த சம்பவம் அண்மையில் நடந்தது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கட்டைவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்ட குறித்த எரிபொருள் நிலையத்தில், 24 மணித்தியாலமும் தமது எரிபொருள் நிரப்பும் நிலையம் திறந்திருக்கும் என சில காலத்தின் முன்னரே நிர்வாகம் அறிவித்திருந்தது.
எனினும், பின்னிரவு அல்லது விடிகாலையில் எரிபொருள் நிரப்ப சென்றால், அங்கு ஊழியர்கள் உறக்கத்தில் இருப்பார்கள் என்றும் , அவர்களை எழுப்பி எரிபொருள் நிரப்புவது பெரும்பாடு என பிரதேச மக்கள் குறிப்பிட்டு வந்தனர்.
இந்த நிலையில், அண்மையில் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்குள் இரவு வேளை நுழைந்த மர்மநபர் , இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசியை திருடிச் சென்றதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்த போது, திருடன் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குள் நுழைந்த போது, காவலாளியும், எரிபொருள் நிரப்பு நிலைய கடமையிலிருந்தவர்களும் நல்ல உறக்கத்தில் இருந்தமை தெரிய வந்தது.
எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குள் உள்ள கண்காணிப்பு கமராவின் மூலம் நிர்வாகத்தினர் இதை அவதானித்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையாக, கண்காணிப்பு கமராவை பிளாஸ்டர் ஒட்டி விட்டே ஊழியரகள் தூங்கியுள்ளனர்.
கண்காணிப்பு கமரா மறைக்கப்பட்டதால் திருடனை பொலிசாரால் அடையாளம் காண முடியவில்லை எனினும் , பொலிசார் பல்வேறு வழிகளில் விசாரணைகளை மேற்கொண்டு திருடனை கைது செய்தனர்.
சம்பவத்தில் உடுப்பிட்டியில் திருமணம் செய்துள்ள நீர்கொழும்பை சேர்ந்த 43 வயதான ஒருவரே திருட்டில் ஈடுபட்டமை பொலிஸார் விசரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையம் தவிர, நகரிலுள்ள பிரபல ஆடையகம் ஒன்றிலும் திருட முயற்சித்து, அதன் மேற்கூரையை உடைத்துள்ளார். எனினும், அவரால் உள்நுழைய முடியாததால் திருட்டுமுயற்சியை கைவிட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கைத்தொலைபேசி மட்டுமல்ல, பணமும் திருடப்பட்டது தெரிய வந்தது.
அதேவேளை , ஊழியர்கள் பணம் களவு போனமை தொடர்பில் முறைப்பாட்டை செய்யவில்லை என கூறப்படுகின்றது. நிர்வாகத்தினரை ஏமாற்றி தூக்கத்தில் இருந்த ஊழிரகள் திருடனால் சிக்கிய சம்பவம் வெளிசத்துக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.