யாழ்ப்பாணம் உள்ள பகுதியொன்றில் நள்ளிரவில் பயணித்த நபர் ஒருவரிடம் இருந்து பணம், நகை, கைக்கடிகாரத்தை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி வீதியில்,நேற்று முன்தினம் (20-06-2023) நள்ளிரவு 11.30 முதல் 12.30 இற்கும் இடைப்பட்ட நேரத்தில் நடந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ் மானிப்பாயை சேர்ந்த ஒருவர் வீதியில் பயணித்த தன்னிடமிருந்து பணம், நகை, மணிக்கூடு பறிக்கப்பட்டதாக அவர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வீதியில் பயணித்துக் கொண்டிருந்த தன்னை ஒருவர் தடுத்து நிறுத்திய பின்னர் மூவர் வந்தனர். ஒருவர் கத்தியை எடுத்து கழுத்தில் வைக்க, மற்றொருவர் இடது கன்னத்தில் அறைந்துள்ளார்.
24,500 ரூபா பெறுமதியான சிட்டிசன் கைக்கடிகாரம், 160,000 ரூபா பெறுமதியான மோதிரத்தை பறித்தெடுத்த திருடர்கள், தன்னிடமிருந்த 263,000 ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளதாக அவரது முறைப்பாட்டில், தெரிவித்துள்ளார்.
இந்த கொள்ளையர்களை மீண்டும் பார்த்தால் அடையாளம் காண முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.