முல்லைத்தீவு (Mullaitivu) கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில் நடவடிக்கையில் ஈடுபட்ட ஆறு கடற்றொழிலாளர்களை முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (12.06.24) முல்லைத்தீவு கடற்பரப்பு பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கடற்பரப்பில் உள்ளூர் கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கடற்றொழிலாளர்கள் குற்றசஞ்சாட்டி வரும் நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தென்பகுதியினைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடல் தொழில் நடவடிக்கையான ஒளி பாச்கி மீன் பிடித்தல், தடைசெய்யப்பட்ட சுருக்குவலை மீன்பிடித்தல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் கரையோரத்தில் நாளாந்தம் தொழில் செய்து வரும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளரகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு தடை செய்யப்பட்ட கடல் தொழில் உபகரணங்களை பயன்படுத்தி கடலில் உள்ள சிறு கடல் வாழ் உயிரினங்களையும் பிடித்துக் கொண்டு செல்கின்றார்கள்.இதனால் கடல் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் கடற்றொழிலாளர்களின் படகுகளில் மிகக் குறைந்த அளவு மீன்களையே பிடித்து வருவதாக இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்வாறான நிலை கடந்த காலங்களில் இருந்து தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், ஒரு கடற்றொழில் படகில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலையும் மற்றைய படகில் தடை செய்யப்பட்ட ஒளிபாச்சி மீன் பிடித்தல் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆறு பேரும் தென்பகுதியினை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் புல்மோட்டை பகுதியில் இருந்து முல்லைத்தீவு கடலுக்கு நேராக கடல் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும். கைது செய்யப்பட்ட நபர்களையும் சான்று பொருட்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.