இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் அமையவுள்ள சர்வக்கட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
பதவிகள் தொடர்பில் ஏற்கனவே எட்டப்பட்டிருந்த இணக்கப்பாட்டை மீறும் வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைப்பீடம் செயற்படுவதால், பங்காளிக்கட்சி தலைவரொருவர் கடும் அதிருப்தியில் இருக்கிறார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின்போது டலஸ் அழகப்பெருமவை (Dullas Alahapperuma) ஆதரிக்கும் முடிவை எடுத்திருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி, கட்சிக்குள் சில இணக்கப்பாடுகளையும் ஏற்படுத்திக் கொண்டது.
மேலும், புதிய நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும்வரை அமையும் சர்வக் கட்சி இடைக்கால அரசாங்கத்தில், ஏற்கனவே அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவிகளை வகித்த இருவரும், பதவிகளை பொறுப்பேற்கமாட்டார்கள் எனவும், ஏனையோருக்கு வாய்ப்பளிக் கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
இதில் பங்காளிக்கட்சி தலைவரொருவருக்கு அமைச்சரவை அமைச்சு பதவி பெற இடமளிக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டிருந்ததாம்.
எனினும், தற்போது ஏனைய இருவருமே அமைச்சு பதவிகளை பெறுவதில் ஆர்வம்காட்டி வருகின்றனர் எனவும், இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் பங்காளிக்கட்சி தலைவர், விரைவில் தீர்க்கமானதொரு அரசியல் முடிவை எடுக்கக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.