மட்டக்களப்பு திருப்பெருந்துறை ஸ்ரீ முத்துக்குமார வேலாயுத சுவாமி ஆலையத்தின் உண்டியலை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தூக்கி சென்று வயல்வெளியில் வைத்து உண்டியின் பூட்டை உடைக்க முற்பட்டு முடியாத நிலையில் உண்டியலை கைவிட்டுச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆலையத்திற்கு வழமைபோல ஆலையத்தின் பொருளாளர் சம்பவதினமான இன்று காலையில் சென்று ஆலையத்தை திறந்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை திருட்டுப்போயுள்ளது தெரியவந்ததையடுத்து பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மட்டக்களப்பு பொலிஸ்நிலைய பெரும்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் விமலரட்ண தலைமையிலான பொலிசார் சென்று விசாரணையை ஆரம்பித்த நிலையில் கோவிலுக்கு முன்பகுதியிலுள்ள வயல்பகுதியில் திருடப்பட்ட கோவில் உண்டியலை கண்டுபிடித்துள்ளனர். இதன்போது உண்டியலின் ஒரு பூட்டை கொள்ளையர்கள் உடைத்தபோதும் அதன் இரண்டாவது பூட்டை உடைக்க முயற்சி செய்த நிலையில் அது பயனளிக்காது உண்டியலை அங்கே விட்டு விட்டு தப்பியோடியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து உண்டியலை திறந்தபோது அதில் இருந்து 19 ஆயிரத்து 820 ரூபா பணத்தையும் உண்டியலையும் மீட்டு ஆலைய நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.