முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பில் மீண்டும் குடியேறுவதற்கு இதுவரையில் தீர்மானம் எதையும் எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சந்திப்புகள் மற்றும் ஏனைய தேவைகளுக்காகக் கொழும்பு வர நேரிட்டால் மகிந்த ராஜபக்ச வருவார். பிறகு அவர் ஊருக்குத் திரும்புவார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் குடியேற இடங்களைத் தேடி வருகிறார், ஆனால் இன்னும் பொருத்தமான வீடு கிடைக்கவில்லை.
போதுமான மற்றும் பொருத்தமான சாலை வசதிகள் உள்ள பகுதியில் ஒரு வீட்டைத் தேர்ந்தெடுப்பதே எதிர்பார்ப்பு என்று சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்ற பொருத்தமான வீடு விரைவில் கிடைக்கும் என்றும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்காவில் வசிக்கும் சிங்கள வர்த்தகப் பிரமுகர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் மதிப்பீட்டு அறிக்கையின் பிரகாரம், மாதாந்த வாடகை செலுத்தி விஜேராம இல்லத்தை மீண்டும் மகிந்தவுக்குப் பெற்றுக் கொடுக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதே போன்று பௌத்த தேரர்கள் குழுவொன்றும் மகிந்தவுக்காக வீடொன்றைக் கொள்வனவு செய்து வழங்குவதற்கு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளனர்.