நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் மார்க்ரம் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
கடைசி ஒருநாள் போட்டி
தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ஜோகன்னெஸ்பர்க்கில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து பந்துவீச்சை தெரிவு செய்ததால், தென் ஆப்பிரிக்க அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது.
தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், வான் டெர் டுசன் 25 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
மார்க்ரம் முதல் சதம்
அதன் பின்னர் களமிறங்கிய ஐடென் மார்க்ரம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவ்வப்போது சிக்ஸர், பவுண்டரிகளை விளாசி அதிரடி காட்டிய மார்க்கரம், 86 பந்துகளில் தனது முதல் ஒருநாள் சதத்தை அடைந்தார்.
28 வயதாகும் மார்க்கரம் தன் 50வது ஒருநாள் போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். மொத்தம் 126 பந்துகளை எதிர்கொண்ட மார்க்ரம், 7 சிக்ஸர்கள் மற்றும் 17 பவுண்டரிகளுடன் 175 ஓட்டங்கள் குவித்தார்.
தென் ஆப்பிரிக்க அணியில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகை கிரிக்கெட்டில் மிரட்டலான வீரராக மார்க்ரம் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.