அநுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் தலாவ பகுதியில் யாழ்ப்பாணம் நோக்கி உல்லாசப் பயணத்திற்குச் சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் மூன்று பயணிகளும் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் பயணிகளில் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த எஞ்சிய இருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 21 வயதுடைய எப்பாவல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களது சடலங்கள் தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.