இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 56 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைச் சிறைகளிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக மத்திய அரசுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், கடந்த 2021 டிசம்பர் 19 மற்றும் 20 ஆம் நாளிலிருந்து இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் 56 மீனவர்களை விடுவித்து, பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இலங்கை அரசின் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு இன்றியமையாத 75 மீன்பிடிப் படகுகளையும் மீட்டெடுக்கவும் முதல்வர் கோரியுள்ளார்.
வரவிருக்கிற பொங்கல் திருநாளை முன்னிட்டு, இலங்கை சிறைகளில் வாடும் 56 மீனவர்களை விடுவித்து, அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதை உறுதி செய்திடத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும், அதற்குரிய உயர்நிலைப் பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசாங்கத்துடன் நடத்திடக் கேட்டுக்கொள்வதாகவும் தனது கடிதத்தில் முதல்வர் எழுதியுள்ளார்.