வடக்கு தீவுகளில் மறு விளைவு இல்லாத சுத்தமான சூரிய சக்தி மின் நிலையங்களை அமைக்க இருந்த சீன திட்டம், இந்தியாவின் பாதுகாப்பு ஆட்சேபனை காரணமாக இடை நிறுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில், அதேபோல் அதற்கு பதிலாக அதே நமது வடக்கு தீவுகளில் மறு விளைவு இல்லாத சுத்தமான சூரிய சக்தி மின் நிலையங்களை அமைக்க இந்தியா உடனடியாக முன் வர வேண்டும்.
அதற்கு இலங்கை அரசு இடம் தர வேண்டும். இந்திய அரசும் தனது வழமையான பாணியை மாற்றி இதற்கு முன்னுரிமை அளித்து, இலங்கை அரசுடன் பேச வேண்டும். ஏனெனில் இந்த இந்தியா – இலங்கை – சீனா கயிறு இழுப்புகளுக்கு மத்தியில் நம் நாட்டுக்கு, சுத்தமான மின்சாரம் தேவை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இதுபற்றி கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கூறியுள்ளதாவது, இலங்கையில் தமது திட்டம் இடை நிறுத்தப்பட்டாலும், அதற்கு பதிலாக அதே மாதிரி மின் உற்பத்தி கட்டமைப்பை மாலைத்தீவின் 12 ஆளில்லா தீவுகளில் முன்னேடுக்க அந்நாட்டு அரசுடன் சீனா உடன்பாடு கண்டு விட்டது.
இந்த இலங்கை திட்டம், இந்தியாவின் ஆட்சேபனை காரணமாக பல மாதங்களுக்கு முன்னரே இலங்கை அரசால் இடை நிறுத்தம் செய்யப்பட்டு விட்டது. எனினும் இது தொடர்பான அறிவித்தலை சீன தூதரகம், நம் நாட்டின் நிதி அமைச்சர் புது டில்லி சென்றிருக்கும் இவ்வேளையில் வெளியிடுகிறது. இதன் பின்னணி எதுவென தெரியவில்லை.
மாலைத்தீவில் சீனா, இதே திட்டத்தை கையாள்வது வேறு விடயம். அதேபோல் இலங்கை திட்டத்தில் இருந்து சீனா முழுமையாக வாபஸ் பெற்று விட்டதா எனவும் தெரியவில்லை. இந்நிலையில் இந்தியா விசேட முன்னுரிமை கொடுத்து, இந்த ஆசிய அபிவிருத்தி வங்கி சிபாரிசு செய்யும் வடக்கு தீவுகளில் மறு விளைவு இல்லாத சுத்தமான சூரிய சக்தி மின் நிலையங்களை அமைக்க நடைமுறையில் முன்வர வேண்டும்.
தற்போது இந்தியாவில் இருக்கும் நமது நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் இதுபற்றி பேசி, வடக்கில் மின் நிலையங்கள் அமைக்கும் திட்டம் இந்தியாவால் பாழானது என்ற குற்றச்சாட்டு எழமுன், இந்திய அரசு தனது வழமையான பாணியை மாற்றி, உடன் நடவடிக்கை எடுத்து, இதற்கு முன்னுரிமை அளித்து உள்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.