பிரான்சில் இருந்து மருத்துவப் பொருட்கள் தாங்கிய கப்பல் இன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அதில் 2.5 மில்லியன் டொலர் பெறுமதியான சத்திரசிகிச்சை உபகரணங்களும் உள்ளடங்குவதாகவும் அவர் கூறினார்.
பிரான்ஸினால் வழங்கப்படவுள்ள மருந்துகள் மற்றும் மயக்க மருந்துகளின் கையிருப்பு காரணமாக நாட்டில் உள்ள அனைத்து அவசர சத்திரசிகிச்சை நிலையங்களையும் தொடர்ச்சியாக 90 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என பிரதமர் அலுவலகத்தில் நேற்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 300,000 யூரோக்கள் (சுமார் 115 மில்லியன் ரூபா) பெறுமதியான மருந்துப் பொருட்களை பிரான்ஸ் அரசாங்கம் முன்னதாக வழங்கியது.
இதேவேளை, 5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மற்றுமொரு மருந்துப் பொருட்கள் தாங்கிய இந்தியக் கப்பல் வெள்ளிக்கிழமைக்குள் நாட்டை வந்தடையுமென சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.