மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பட்டதாரி பெண் மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் அந்த வைத்தியசாலையின் மருத்துவ ஆலோசகர்கள் குழுவினால், சுகாதார அமைச்சுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் ஊடாக மருத்துவ ஆலோசகர்களின் கையொப்பங்களுடன் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரியராஜ் சிந்துஜா உயிரிழந்த சம்பவம் தொடர்பில், ஆழ்ந்த கவலையைத் தெரிவிப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் சில பணியாளர்களின் கவனயீனத்தால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.
குறித்த சம்பவத்தில் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய துறைசார் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான சுகாதார அமைச்சின் முடிவை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக அவர்கள் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தநிலையில் இந்த விடயம் தொடர்பான ஒழுக்காற்று நடவடிக்கை இதுவரை எடுக்கப்படாமையால், மன்னார் மாவட்டத்தில் உள்ள சுமார் 2 இலட்சம் நோயாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் நடத்தப்பட்டுள்ள முழுமையான விசாரணையின் அடிப்படையில், எடுக்கப்பட வேண்டிய ஒழுங்கு நடைமுறைகள் மற்றும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் மருத்துவ ஆலோசகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.