மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தொடர்பாக சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் (24) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் – மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளியடி கிராமத்தில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது-14) எனும் மாணவன் கடந்த வெள்ளிக்கிழமை (17) காலை கள்ளியடி பகுதியில் அரிசி ஆலை ஒன்றுக்கு அரிசி திரிக்கச் சென்ற நிலையில் அங்கு பணம் திருடப்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன் சிறுவனின் நண்பரிடத்தில் கூறிய போது அவர் எடுத்திருந்தால் பணத்தை திரும்ப தருவதாக கூறியுள்ளனர்.
பின்னர் அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன் மற்றும் மகனின் நண்பர்கள் சிலர் இணைந்து குறித்த சிறுவனின் வீட்டிற்கு சென்று சிறுவனை தாக்கியதாகவும் , சிறுவனின் தாய் தாக்க முயன்றவர்களின் காலில் விழுந்து கதறியதாகவும் இருந்தாலும் சிறுவனை தொடர்ந்து தாக்கி விட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் வீட்டில் மகனை நித்திரையாக்கி விட்டு தாயார் குளித்து விட்டு வந்த நேரம் குறித்த சிறுவனை தாக்கியவர்கள் மீண்டும் அவர்களது வீட்டில் இருந்து திடீர் என செல்வதை அவதானித்து தாயார் ஓடி வந்து பார்த்த போது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்டுகின்றது.
இந்த நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட இலுப்பைகடவை பொலிஸார் குறித்த மரணம் தொடர்பாக கள்ளியடி பகுதியை சேர்ந்த 16 வயது முதல் 22 வயதுடைய நான்கு பேரை கைது செய்து, இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் விசாரனைகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த 4 பேரையும் இன்றைய தினம் (19) இலுப்பைக்கடவை பொலிஸார் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 4 சந்தேக நபர்களையும் எதிர் வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.