மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயங்களில் மேலும் 302 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகிய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 991 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் அச்சுதன் தெரிவித்துள்ளார்.
கொரோனா நிலைமை குறித்து இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று மாவட்டத்தில் மிகவும் அதிகரித்து வருகின்றது. எனவே மக்கள் முடிந்தளவு வீடுகளில் பாதுகாப்பாக இருந்து சுகாதார துறையினரின் சுகாதார வழிகாட்டலை பின்பற்றி அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே இந்த கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும்.
நாளாந்தம் மாவட்டத்தில் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 24 மணித்தியாலயத்தில் மட்டக்களப்பில் 80 பேரும், களுவாஞ்சிக்குடியில் 39 பேரும், வாழைச்சேனையில் 15 பேரும், காத்தான்குடியில் 31 பேரும், ஓட்டமாவடியில் 6 பேரும், கோறளைப்பற்று மத்தியில் 7 பேரும்,செங்கலடியில் 79 பேரும், வவுணதீவில் 5 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு ஆரையம்பதியில் 13 பேரும், கிரானில் 4 பேரும், மட்டு. போதனா வைத்தியசாலையில் 4 பேரும், பொலிஸார் 9 பேருக்கும் வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் பட்டிப்பளை, வெல்லாவெளி, ஏறாவூர் ஆகிய பிரதேசங்களில் தலா 2 பேர் வீதம் 6 பேர் உட்பட மாவட்டத்தில் 302 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றினால் மாவட்டத்தில் இதுவரை 137 பேர் உயிரிழந்துள்ளதுடன் இதில் 3ஆவது அலையில் மாத்திரம் 128 பேர் உரிரிழந்துள்ளனர்.
எனவே இந்த தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கு ஒரேவழி முதலில் தேவையற்ற விதத்தில் வீட்டைவிட்டு வெளியில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.