மக்கள் சேவைக்காக வரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதற்கு ஓய்வூதியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ஆளும் தரப்பினரும் எதிர் தரப்பினரும் கொள்ளையடித்தவர்கள் தொடர்பாக பேசுகிறார்கள். நாமும் இந்தக் கொள்ளையர்கள் எப்போது பிடிப்பட்டு சிறைக்குச் செல்வார்கள் என்பதை காண ஆவலாக இருக்கிறோம்.
மத்திய வங்கியில் கொள்ளையடித்தவர்கள் இருந்தால், அவர்களை சிறையில் அடையுங்கள். நாமும் அதனைக் காண மகிழ்ச்சியாக காத்துக் கொண்டிருக்கிறோம்.
நிதியமைச்சரின் 2022 வரவு – செலவுத் திட்ட உரையானது, திருமண வீட்டில் கதைக்க வேண்டிய கதையை மரண வீட்டில் கதைத்ததைப் போன்றுதான் காணப்பட்டது.
மிகவும் சவால் மிக்கதொரு காலத்தில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால், நிதியமைச்சரின் ஊடாக மக்களுக்கு ஏதேனும் நிவாரணங்கள் கிடைக்கும் என எதிர்ப்பார்த்தோம்.
இந்த வரவு – செலவுத் திட்டமானது, இலங்கையின் பொருளாதாரம் குறித்து அக்கரையில்லாமல் தயாரித்தது போன்றுதான் காணப்படுகிறது.
உதாரணமாக ஒரு கிராம அபிவிருத்திக்காக 3 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது எதிர்வரும் தேர்தலை குறிவைத்து கொண்டுவரப்பட்டதாகவே தெரிகிறது.
செலவைக் குறைத்துக் கொள்ள வேண்டிய இந்த நேரத்தில் இவ்வாறான வேலைத்திட்டங்கள் அவசியமா என்பதைத்தான் நாம் சிந்திக்க வேண்டும். இது நாட்டின் அபிவிருத்தியை பெரிதும் பாதிக்கும்.
30 வருடமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு பகுதிகளுக்கென விசேட நிதிகள் ஒதுக்கப்படவில்லை.
வீதிகளை அபிவிருத்தி செய்யும்போதும், மக்களுக்கு பயனுள்ளதாக அவற்றை அமைக்க வேண்டும். மாறாக பிரதேச சபை உறுப்பினருக்காகவோ, கட்சித் தொண்டர்களுக்காகவோ, பாராளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களுக்காகவோ வீதிகளை நிர்மானிக்கக்கூடாது.
அத்தோடு, வேலை செய்ய முடியாத இராஜாங்க அமைச்சர்களை அரசாங்கம் பதவிலிருந்து விலக்க வேண்டும்.
அவருக்கு வாகனம் கொடுத்து, டீசல் கொடுத்து, சாரதி, அலுவலம், சம்பளம் என எல்லாம் கொடுத்து அவரால் வேலை செய்ய முடியாவிட்டால் அவர் அந்தப் பதவியில் இருப்பதில் பயனில்லை.
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களாலேயே நன்றாக வேலையை செய்ய முடியும். எனவே, அரசாங்கம் இதுதொடர்பாகவும் சிந்தித்து, ஒரு கொள்கை முடிவொன்றை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பாக பேசப்படுகிறது. எனக்கு வயது 31 தான் ஆகின்றது. எனக்கு உண்மையில் ஓய்வூதியம் தற்போது தேவையில்லை.
என்னைப் பொறுத்தவரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் எனும் ஒன்றே தேவையில்லை. மக்கள் சேவைக்காக வரும் உறுப்பினர்களுக்கு எதற்கு ஓய்வூதியம்?
ஓய்வூதியம் தொடர்பான சர்ச்சை தற்போது எழுந்துள்ள நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துக் கொண்டு குறித்த விடயம் தொடர்பாக அதிருப்தியடைந்துள்ளனர் என நான் அறியக்கிடைத்தேன்.
மக்களை ஏமாற்றும் வகையில் கருத்துக்களைக் கூறாமல், பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டுமெனில் சில தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்தே ஆக வேண்டும்.
இன்று நாட்டில் எரிப்பொருள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, எரிப்பொருள் விலை குறித்து சூத்திரமொன்றை அறிமுகப்படுத்தினார். இது அப்போது கடுமையாக கேலிக்குள்ளாக்கப்பட்டது.
ஆனால், இதனை நடைமுறைப்படுத்தியிருந்தால் உண்மையில் எரிப்பொருள் கொள்வனவிற்கு அரசாங்கத்தினால் செலவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது.
இன்று சம்பளத்தை வழங்கக்கூட பணத்தை அச்சடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசாங்கம் கூறியுள்ள சில விடயங்களை நடைமுறைப்படுத்த எங்கிருந்து பணம் கிடைக்கப்போகிறது என்று இதுவரை தெரியவில்லை.
அன்று எம்.சி.சி.க்கு எதிர்ப்புத் தெரிவித்த தேச அபிமானிகளில் ஒருவர் கூட கொழும்பு, துறைமுக நகரத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
அரசாங்கம் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் சுப்பர் சார்ஜ் டெக்ஸை விதித்துள்ளது. 1960 களில் கூட இந்த வரி விதிக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டில் நிதியமைச்சராக ரவி கருணாநாயக்க இருக்கும்போது, இவ்வாறான வரியைத் தான் விதித்திருந்தார்.
2019 ஆம் ஆண்டு வரை பொருளாதாரம் மற்றும் வரிகள் தொடர்பான கொள்கைகள் நன்றாகத் தான் நாட்டில் காணப்பட்டது. மக்களும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்கள். இதனை மாற்றுமாறு மக்கள் அரசாங்கத்திடம் கூறவில்லை.
ஆனால், இந்த அரசாங்கம் வந்தவுடன் அனைத்தையும் இல்லாது செய்து, தனக்கு நெருக்கமான தரப்பினர் பயனடையும்வகையில் தான் புதிய வரிகளை விதித்தார்கள்.
தற்போது மீண்டும் சுப்பர் சார்ஜ் டெக்ஸை விதித்துள்ளார்கள். உண்மையால் இதனால் முதலீட்டாளர்களுக்கான நம்பிக்கை இல்லாமல் போகும் அபாயம் காணப்படுகிறது.
வரிக்கொள்கைகள் தொடர்பாக நாம் சர்வதேச நாடுகளின் உதவியை பெற்றுக் கொள்ள வேண்டும். முடிந்தால் சர்வதேச நாணய நிதியத்தில் ஆலோசனைகளைப் பெற்று இதனை வகுக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கை முழுவதும் தற்போது சுமார் 300 தேசியப் பாடசாலைகள் காணப்படுகின்றன. நாட்டில் ஒட்டுமொத்தமாக 4 மில்லியன் மாணவர்கள் இருக்கிறார்கள்.
1000 தேசியப் பாடசாலைகளை புதிதாக அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஊடாக சுமார் 2000, 3000 மாணவர்கள்வரை தேசியப் பாடசாலைகளுக்குச் செல்வார்கள்.
மாகாணப் பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 10 ஆயிரமாக உள்ள நிலையில், அதிலிருந்து ஆயிரம் மாணவர்கள்வரை தேசியப் பாடசாலைக்குச் சென்றால், மாகாணப் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களின் விகிதம் குறைவடையும் நிலைமைக் காணப்படுகிறது.
இது மாகாண சபைகளை பலவீனப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாடா எனும் கேள்வியும் எழுகிறது.
எமக்கு இப்போது தேசியப் பாடசாலைகள் தேவையில்லை. மாறாக அனைத்துப் பாடசாலைகளையும் தேசியப் பாடசாலைகளின் தரத்திற்கு உயர்த்த வேண்டும்.
சுகாதாரத் துறையை எடுத்துக் கொண்டால், நாம் பொது வைத்தியசாலைகளின் தரத்தை மேலும் அதிகரிக்க வேண்டும்.
சுகாதாரத்துறையை மேம்படுத்த சிறிய வரிவிதிப்பை செய்தால் கூட அதனை பொது மக்கள் ஒருபோதும் நிராகரிக்க மாட்டார்கள்.
இதில் வரும் நிதியைக் கொண்டு, சுகாதாரத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்தோடு, சுற்றுலாத் துறையென்பது இலங்கையில் பொருளாதாரத்திற்கு முக்கியமான ஒன்றாகக் காணப்படுகிறது.
ஆனால், சுற்றுலாத்துறையில் அண்மையில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் ஒரு நாளைக்கு 5 மில்லியன் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்தத் தொகை சரியானதா என்பதை அரசாங்கம் ஆராய்ந்துப் பார்க்க வேண்டும்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்த சுப்பர் மார்க்கட்டுகளில் மதுபானங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அப்படியொரு திட்டமிருந்தால் தயவு செய்து வடக்கு – கிழக்குப் பகுதிகளுக்கோ பின்தங்கிய கிராமங்களுக்கோ அதனை நடைமுறைப்படுத்த வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கிறேன்.
சுற்றுலாப் பயணிகளின் வருகைக் குறைவாக இருக்கும் இந்தக் காலப் பகுதியில் இவ்வாறாதொரு திட்டம் கொண்டுவரப்பட்டால், அதனை அந்தக் கிராமத்தில் வசிப்போர்தான் கொள்வனவு செய்து குடிப்பார்கள்.
தற்போது இருக்கும் மதுபானசாலைகளின் எண்ணிக்கையே போதுமானதாகும். கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு செல்ல 7 மணித்தியாலங்கள் செல்கிறது. யாழ்ப்பாணத்திற்கு செல்ல 8 மணித்தியாலங்கள் தேவைப்படுகிறது.
நான் வெளிவிவகார அமைச்சின் ஆலோசனைக் குழுவிடம் சென்று இராமேஸ்வரம் – மன்னார் படகு சேவையை மீள ஆரம்பிக்குமாறும், பலாலி விமானநிலையத்தை இயக்குமாறும், மட்டக்களப்பு உள்ளுர் விமானநிலையத்தை புனரமைத்து விமான சேவைகளை ஆரம்பிக்குமாறும் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்திருந்தேன்.
வடக்கு – கிழக்கிற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க பல்வேறு யோசனைகளை நாம் முன்வைத்துள்ளோம். அரசாங்கம் இந்த விடயங்களில் அக்கரை செலுத்தவில்லை.
இந்தியாவுடன் இலங்கை நட்புறவாக இருப்பதாக கூறிக்கொள்ளும் இந்த அரசாங்கம், இந்தியாவுடனான சுற்றுலாத்துறையை மேம்படுத்த எந்தவொரு நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை.
தற்போது பிரதமராக இருக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க கடந்த காலங்களில் 2 தடவைகள் பொன்னான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன.
யுத்தம் முடிவடைந்தவுடன் 2010 இல் அவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக் கொண்ட பாராளுமன்றம் இருந்தது.
18 ஆம் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தார். சர்வதேசத்தின் ஆதரவும் இருந்தது.
ஆனால், அவரால் நாட்டின் தேசியப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் போனது.
தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு இவர்கள் வந்துள்ளார்கள். இப்போதாவது இந்தப் பிரச்சினைகளுக்கு இவர்கள் தீர்வினை வழங்க வேண்டும்.
ஆசியாவில் மூத்த அரசியல்வாதியாக இருக்கும் மஹிந்த ராஜபக்ஷ, ஏன் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்காமல் இருக்கிறார்?
அனைவருக்கும் சமமான உரிமையை வழங்குமாறுதான் தமிழ் மக்கள் கோருகிறார்கள். இதனை ஏன் வழங்க முடியாமல் உள்ளது?
இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வினை முன்வைக்கத் தவறினால், 30 – 40 வருடங்கள் கிழித்து ராஜபக்ஷவினரை மக்கள் தூற்றும் நிலைமை நிச்சயமாக ஏற்படும். ராஜபக்ஷவினரால் தான் இந்த நாடு அழிவடைந்தது எனும் வரலாறு பதியப்படும். இந்த நிலைமைக்கு செல்ல வேண்டாம் என்று தான் நாம் கேட்கிறோம்.
அரசாங்கம் இன்று செய்யும் இந்தச் செயற்பாடுகளினால் எமது வருங்கால சந்ததியினர்தான் பாதிக்கப்படுவார்கள். நாம் பிளவடையாத நாட்டுக்குள்தான் ஒரு தீர்வை எதிர்ப்பார்கிறோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரிவினைவாதக் கட்சியாக சித்தரித்து தான் இதுவரை காலமும் நீங்கள் வாக்குக் கேட்டீர்கள். ஆனால், இனியும் இவற்றை மக்கள் நம்பத் தயாரில்லை.´ எனக் குறிப்பிட்டுள்ளார்.