ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்திற்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 200-க்கும் மேற்பட்ட கலவரக்காரர்கள் பொலிஸ் நிலையத்தின் கதவுகளை உடைத்து பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 200 ஆண்களும் பெண்களும் அங்கு இருந்தனர்.
மேலும் பெரும்பாலான ஆண்கள் போதையில் இருந்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த குழுவினரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
‘கலவரக்காரர்களை கட்டுப்படுத்த வானத்தை நோக்கிச் சுடப்பட்டது. ஏனெனில் அவர்கள் பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்தால் பொலிஸாரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும்.’ என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை பொலிஸாரின் எச்சரிக்கை துப்பாக்கிப் பிரயோகத்தை பின்னர் அந்த குழுவினர் முற்றுகையை கைவிட்டு வீதிக்கு சென்று சுமார் ஒரு மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர் என தெரிவிக்கப்படுகிறது.