பதுளையில் வாள் மற்றும் தடிகளை ஏந்தியவாறு வர்த்தகர் ஒருவரின் வீடொன்றிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கி தங்கம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை – ஹல்தோட்டை பிரதேசத்தில் நேற்று இரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடொன்றில் புகுந்த 7 பேர் கொண்ட கும்பலே இவ்வாறு கொள்ளை இட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொள்ளைச் சம்பவத்தில் சுமார் 40 இலட்சம் பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவ் வீட்டிற்கு சென்ற கொள்ளை கும்பல், பொலிஸார் என அறிமுகம் செய்து கதவை திறக்க செய்துள்ளனர்.
அதன் பின் தடிகளோடும் கூறிய ஆயுதங்களோடும் உள்ளே நுழைந்து வீட்டு உரிமையாளர் மற்றும் அவரது 2 மகன்மார் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் பொலிஸ் சீருடைக்கு நிகரான சீருடை அணிந்து, வெள்ளை பாதுகாப்பு தலைக்கவசம் மற்றும் கறுப்பு முகமூடிகளை அணிந்து மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அங்குருவாதொட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.