பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரிசியா ஸ்கொட்லான்ட் உள்ளிட்ட குழுவினர் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை அண்மையில் சந்தித்தனர்.
இங்கு தூதுக்குழு பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவருடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதோடு, பொதுநலவாய அமைப்பினால் இந்த ஆண்டு இளைஞர்களின் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இளைஞர் சமூகத்தினரின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தி, அவர்களை ஆயத்தப்படுத்துவதில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கவனம் திரும்பியுள்ளதாக செயலாளர் நாயகம் எதிர்க்கட்சித் தலைவரிடம் தெரிவித்தார்.
இந்நாட்டுப் பாடசாலைகளில் கல்வி கற்கும் சிறார்களின் கணனி அறிவை மேம்படுத்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவரின் எண்ணக்கருவாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பிரபஞ்சம் நிகழ்ச்சித்திட்டத்திற்கு பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் எதிர்க்கட்சித் தலைவருக்கு தமது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
பொதுநலவாய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் பேராசிரியர் லுயிஸ் பிரான்சிஸ், செயலாளர் நாயக அலுவலகத்தின் பணியாளர்கள் குழாம் தலைமை அதிகாரியும், சிரேஷ்ட பணிப்பாளருமான தெபோரா ஜெமிசன், ஆளுகை மற்றும் சமாதான இயக்குநகரகத்தின் ஆசிய பிராந்திய ஆலோசகரும், தலைவருமான கலாநிதி தினுஷா பண்டிதரத்ன, தொடர்பாடல் அதிகாரியும் ஊடக மற்றும் பொதுமக்கள் விவகார அதிகாரியான எமி கொல்ஸ் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.