650 வாட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் ஒரு வகை வணிக வெடிபொருட்களுடன் மன்னார், முந்தல் பகுதியில் வசிக்கும் ஒருவரை நேற்றையதினம் (21-02-2024) காலை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
பல்லேமுனை பிரதேசத்தில் பொது போக்குவரத்து பேருந்தை சோதனையிட்ட போது 43 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களுடன் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
மன்னார் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் வடமத்திய கடற்படைக் கட்டளையில் உள்ள கஜபா கடற்படையினரால் விசேட ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் நோக்கில் இந்த வெடிபொருட்கள் பெறப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
வெடிமருந்துகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவது கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாலும், கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருப்பதாலும், அதனைத் தடுப்பதற்கு வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.