நிதியமைச்சர் பதவியில் இருந்து விரைவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) நீக்கப்படலாம் என அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நடைபெற்ற பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்க ரணில் விக்கிரமசிங்க தவறியுள்ளதன் காரணமாக அவரை நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்த முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) மீண்டும் நிதியமைச்சராக நியமிக்கப்படலாம் என அந்த தகவல்கள் கூறுகின்றன.
இருப்பினும் இந்த தகவல் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் நிதியமைச்சராக பதவி வகித்த பசில் ராஜபக்ஷ பதவி விலகியதை அடுத்து, அலி சப்ரி நிதியமைச்சராகவும் நீதியமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து முழு அமைச்சரவை அமைச்சர்களின் பதவிகளும் இரத்தானது.
இந்த நிலையில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டு புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது.
நீண்டகாலமாக நிதியமைச்சர் நியமிக்கப்படாத நிலையில், ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராக பதவியேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது