பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு விசேட சட்டங்கள் கொண்டுவரப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் நிறைவடைந்ததையடுத்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில், அமைச்சில் தோட்டத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அதற்கான சட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, இந்த ஆண்டு தொழிலாளர் சட்டக் குறியீடு ஒன்று தயாரிக்கப்படவுள்ளதுடன், அதில் தோட்டத் தொழிலாளர்களுக்கான விசேட சட்டங்களை உள்ளடக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இக்கலந்துரையாடலில், தோட்டத் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் திணைக்களத்தினால் அனுப்பப்பட்டுள்ள கடிதங்கள் சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளமையினால் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தோட்டத் தொழிற்சங்கங்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, தோட்டத் தொழிலாளர்களுக்கு தொழில் திணைக்களத்தினால் அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்தும் தமிழிலும் அனுப்பப்பட வேண்டுமென அமைச்சர் உரிய கலந்துரையாடலில் பணிப்புரை விடுத்துள்ளார்.