பெண்ணொருவரை கடத்திச் சென்று கப்பம் பெற முயற்சித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 9 மில்லிமீற்றர் துப்பாக்கியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுனேரிய லான்சிகம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 24ஆம் திகதி சிலரால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப் பெண்ணின் கணவர் தனது மனைவியை சிலர் கடத்திச் சென்றுள்ளதாகவும் அவரை விடுவிக்க பணம் வழங்க வேண்டும் என கடத்தல்காரர்கள் தன்னிடம் கோரிக்கை விடுத்து வருவதாகவும் மாரவில பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடத்தப்பட்ட பெண்ணின் கணவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மாரவில பொலிஸார் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொச்சிக்கடை தலுவாகொடுவ பகுதியில் உள்ள வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் அப் பெண்ணை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பெண்ணைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (25) மாரவில நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி கடத்தப்பட்ட அப் பெண் 08 பேரிடம் தலா 10 இலட்சம் ரூபா வீதம் பணம் பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதுவே அந்த பெண் கடத்தப்பட்டமைக்கான காரணமாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.