நேற்று நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து பெற்றோர்கள் குழுவொன்று கிரிந்திவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.
கிரிந்திவெல போகஹவத்த ஜினானந்த ஆரம்பப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் சிலர், கிரிந்திவெல மத்திய மகா வித்யாலயத்தில் அமைந்துள்ள பரீட்சை மத்திய நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றியபோதே இந்த அநீதி இடம்பெற்றுள்ளதாகப் பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
முற்பகல் 11.15 மணிக்கு வழங்கப்பட வேண்டிய வினாத்தாள், தமது பிள்ளைகளுக்கு முற்பகல் 11.30 மணிக்கே வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், குறித்த வினாத்தாள் பிற்பகல் 12.15 மணிக்கு மீண்டும் சேகரிக்கப்பட்டதால், தமது பிள்ளைகளுக்குப் பரீட்சைக்கான குறிப்பிட்ட நேரத்தில் அரை மணி நேரத்திற்கு அருகாமையிலான நேரம் பறிபோனதாகவும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.
இதனால் தமது பிள்ளைகளுக்குக் கடும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் பெற்றோர்கள், இது தொடர்பில் தீர்வொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
இதனிடையே, கம்பஹா வலயக் கல்வி அலுவலக அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பெற்றோருடன் கலந்துரையாடிய போதிலும், அதில் எவ்வித தீர்வும் கிடைக்காததால் பொலிஸில் முறைப்பாடு செய்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

