சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இதுவரை 819 குடும்பங்களைச் சேர்ந்த 3,253 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருவர் உயிரிழதுள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, முந்தல் பிரதேச செயலகத்தில் 24 கும்பங்களைச் சேர்ந்த 66 பேரும், கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்தில் ஒரு குடும்பங்களைச் சேர்ந்த 6 பேரும், வென்னப்புவ பிரதேச செயலகத்தில் 44 குடும்பங்களைச் சேர்ந்த 147 பேரும், வண்ணாத்தவில்லு பிரதேச செயலகத்தில் 520 குடும்பங்களைச் சேர்ந்த 2,114 பேரும், புத்தளம் பிரதேச செயலகத்தில் 230 குடும்பங்களைச் சேர்ந்த 930 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரி தெரிவித்தார்.
அத்துடன், வண்ணாத்தவில்லு மற்றும் ஆனமடுவ ஆகிய பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன், முந்தல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொத்தாந்தீவு பகுதியில் 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் இன்று (09) காணாமல் போயுள்ளார்.
கொத்தாந்தீவு பகுதியிலுள்ள இறால் பண்ணை ஒன்றில் வேலைக்கு சென்று வெள்ளநீருக்குள் சிக்கிக் கொண்ட உறவினர் ஒருவரை அழைத்துச் செல்வதற்காக வீட்டிலிருந்து சென்ற குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காணாமல் போன குடும்பஸ்தரை பொலிஸார், மீனவர்களும் மற்றும் பொதுமக்களும் இணைந்து படகுகளின் உதவியுடன் தேடி வருகின்றனர்.
இதேவேளை, நீர்ப்பாசனத் திணைக்களம் மூலம் புத்தளம் மாவட்டத்தின் தங்கொட்டு மற்றும் ஙென்னப்புவ ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட 13 கிராம சேவகர் பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு பற்றிய அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.