இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இந்தியாவின் “அதிகாரப்பரலாக்கல்” என்ற நிலைப்பாட்டுக்கு இலங்கை மௌனம் சாதித்துள்ளமை தொடர்பில் ஆங்கில செய்தித்தாள் ஒன்றின் பத்திப் பகுதியில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
ஏற்கனவே இந்தியாவும் இலங்கையும் செய்துக்கொண்ட இந்திய -இலங்கை உடன்படிக்கையின் கீழ் 13வது அரசியலமைப்பு உருவானது,
இதன்மூலம் இலங்கையில் மாகாணசபைகள் அமைக்கப்பட்டு அதிகாரங்கள் பகிரப்பட வாய்ப்பளிக்கப்பட்டன.
எனினும் பல ஆண்டுகள் கழிந்துள்ளபோதும் அந்த உடன்படிக்கை இன்னும் முழுமையாக அமுல்செய்யப்படவில்லை.
இந்தநிலையில், இதுவரை காலமும் 13வது அரசியலமைப்பின் கீழ் தீர்வை வலியுறுத்தி வந்த இந்தியா, கடந்த வாரத்தில் வெளியுறவு அமைச்சர் ஜி.எல் பீரிஷின் இந்திய பயணத்தின் பின்னர் வெளியிட்ட கூட்டறிக்கையில், “ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பரவலாக்கம் மூலம் தமிழர்களுக்கு நீதி மற்றும் சமாதானம் ஏற்படுத்தப்படவேண்டும்” என்ற வலியுறுத்தலை விடுத்துள்ளது.
இதில், இந்திய “அதிகாரப்பரவலாக்கம்” என்ற சொல்லை மாத்திரம் பயன்படுத்தியமை தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன.
ஏற்கனவே 13வது அரசியமைப்பை முழுமையாக அமுல் செய்யவேண்டும் என்று கோரி, இந்திய அரசாங்கத்துக்கு மனு ஒன்றை வழங்க இலங்கையின் தமிழ் கட்சிகள் முன்வந்தன.
எனினும் இலங்கை தமிழரசுக்கட்சியின் யோசனையின்படி, இந்த வலியுறுத்தலில், சமஸ்டி தீர்வு என்ற விடயமும் உள்ளடக்கப்பட்டது.
இந்த அம்சங்கள் சேர்க்கப்பட்டே பின்னர் இந்த மனு இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்டது.
எனவே இந்த 13க்கு அப்பால் விடயத்தில் தமிழ் கட்சிகளும் இலங்கை அரசாங்கமும் 13வது அரசியலமைப்புக்கு அப்பால் சென்று பேச்சுவார்த்தைகளை நடத்தவே, தமது கூட்டறிக்கையில் 13வது அரசியலமைப்பு என்ற விடயத்தை இந்தியா குறிப்பிடவில்லை என்று கருத்துக்களும் வெளியாகியுள்ளன.
எனினும் இந்த விடயத்தில் இந்தியாவின் உண்மையான நிலைப்பாடு இதுவரை வெளியாகவில்லை.
அதேநேரம் இலங்கையும் இது தொடர்பாக மௌன மொழியை கடைபிடித்துள்ளது.
இதேவேளை இலங்கையில் புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் அரசியலமைப்பில் மாகாணசபைகளின் எண்ணிக்கை ஐந்தாக குறைக்கப்படுகிறது என்ற தகவல்களின் அடிப்படையில், 13ம் திருத்தத்தை குறிப்பிடாது, “அதிகாரப்பரலாக்கம்” என்ற விடயத்தை இந்தியா வலியுறுத்தியதா? என்றும் கருத்துருவாக்கங்கள் எழுந்துள்ளன.