நாட்டில் தொடந்து சிலிண்டர்கள் தீப்பற்றல், காஸ் அடுப்புகள் வெடித்துச் சிதறுதல் மற்றும் காஸ் அடுப்பையும், சிலிண்டர்களையும் இணைக்கும் குழாய்கள் வெடித்துச் சிதறுதல் என பல அனர்த்தங்கள் நிகழ்கின்றமை மக்களை கலக்கத்தில் தள்ளியுள்ளது.
இந்நிலையில், புதிதாகக் கொள்வனவு செய்யும் சிலிண்டர்களை திறந்தவுடன் அதிலிருந்து பல குமிழ்கள் ஒரே நேரத்தில் வெளியே வருகின்றதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில் புதிதாக கொள்வனவு செய்யும் காஸ் சிலிண்டர்களை வீடுகளுக்கு கொண்டுச் செல்லும் நுகர்வோர், சீலை கழற்றி மூடியை திறந்தவுடன் இவ்வாறு குமிழ்கள் நிரம்பிக்கொள்கின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், காஸ் சிலிண்டர்களைக் கொள்வனவு செய்த கடை உரிமையாளர்களிடம் தெரிவிக்கையில், தங்களால் ஒன்றும் செய்யமுடியாது என கூறியதுடன், இவ்வாறான சிலிண்டர்களை மீளவும் பெற்றுக்கொள்ளுமாறு நிறுவனங்கள் தங்களுக்கு அறிவுறுத்தவில்லை என கையை விரிப்பதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் எரிவாயுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அதன் விலையும் அதிகரித்ததை தொடர்ந்து இவ்வாறான வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.