பிரான்ஸில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை தமிழ் எழுத்தாளர் டானியல் ஜெயந்தனின் வீட்டை சுற்றிவளைத்த, அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் சிலர் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பிரான்ஸின் நெவர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த எழுத்தாளர் டானியல் ஜெயந்தன் புலம்பெயர்ந்து தற்போது பிரான்ஸில் வசிக்கிறார்.
அவரது “வயல்மாதா“ சிறுகதை தொகுதி கடந்த சில தினங்களின் முன்னர் பிரான்ஸின் போர்கோன் மாநிலத்தின் நெவர் பகுதியில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த சிறுகதை தொகுதிக்கு, அங்கு புலம்பெயர்ந்து வாழும் சில கத்தோலிக்க தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டானியல் ஜெயந்தனின் வீட்டை சுற்றிநின்று மிரட்டல் விடுத்த பின்னர், அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் முன்பாக வயல்மாதா சிறுகதை தொகுதியின் பிரதிகள் சிலவற்றை தீயிட்டுள்ளனர்.
புத்தக தலைப்பும், உள்ளடக்கமும் கிறிஸ்தவத்தை அவமதிக்கும் விதமாக உள்ளதாக அந்த சிறுகுழு தெரிவித்தது. மத அடிப்படைவாதிகளை போல செயற்பட்ட அந்த குழுவின் மிரட்டலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் கருத்துச் சுதந்திரத்தை உயரிய அளவில் பேணும் நாடுகளில் ஒன்றாக பிரான்ஸ் குறிப்பிடப்படும் நிலையில், அங்குள்ள தமிழர்கள் சிலர் மதத்தை காரணம் காட்டி புத்தகத்தை தீவைத்துள்ளது, அங்குள்ள தமிழ் மக்களையும் பெரிதும் சங்கடப்படுத்தியுள்ளனர்.