காசோலை மோசடி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என கண்டறிந்த நீதிமன்றம் பிரபல நடிகர் விமலுக்கு ஒருவருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நடிகர் விமல் நடித்த திரைப்படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படத்தை தயாரிக்க நடிகர் விமல், நிதியாளர் கோபி என்பவரிடமிருந்து ரூ.4.5 கோடி கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை.
காசோலை மோசடி
பின்னர், அந்த தொகையை விமல் காசோலையாக வழங்கியுள்ளார். இந்த காசோலையை கோபி வங்கியில் செலுத்திய போது, கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதையடுத்து ரூ.4.5 கோடி காசோலை மோசடி வழக்கை நடிகர் விமல் மீது நிதியாளர் கோபி சென்னையில் உள்ள 11-வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கெனவே நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இன்று தீர்ப்பு அளித்தார்.
ஒரு வருட சிறைத் தண்டனை
அதில், விமலுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, அவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனையை விதிக்கிறேன். வாங்கிய தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த தீர்ப்பு வழங்கும்போது நடிகர் விமல் தரப்பில், மேல்முறையீட்டு செய்ய உள்ளதாகவும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

