தற்போதைய பல்கலைக்;கழக அவல நிலைமைகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான பங்களிப்புக்களை வழங்குவது அரசாங்கத்தின் கடமை என உயர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த நேற்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“பல்கலைக்கழகத்துக்குள் அடிப்படைவாதம் பாசிசவாதம் உள்ளிட்ட பல முறையற்ற செயற்பாடுகளும் தற்போது இடம்பெறுகின்றன. பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவன் கைக்கடிகாரம் அணிந்துகொண்டு பல்கலைக்கழகத்துக்கு வரக் கூடாது. முதலாம் ஆண்டு மாணவி சீத்தை துணியிலான ஆடை அணிய வேண்டும். காதணி, மாலை ஆகியவற்றை அணியக் கூடாதென சில மாணவர்கள் பகிடிவதைகள் ஈடுபடுவதாக” பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
இது தொடர்பாக உயர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த மேலும் விபரிக்கையில்:
அண்மையில்; பேராதனைப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் காணாமல் போனதாகக் கூறப்பட்டது, பின்னர் மற்றொரு மாணவனும் காணாமல் போயுள்ளதாகக் கூறப்பட்டுள்ளதுடன், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடப் பீடாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் தொடர்பாக இன்றைய தேசிய பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் பல்கலைக்கழக வரலாற்றில் பல அவலங்கள் இடம்பெற்றுள்ளன. 2019ஆம் ஆண்டின் பின்னர் பல்கலைக்கழகங்களுக்கான உயர்கல்வி வாய்ப்பை விருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் பத்தாயிரம் மாணவர்கள் உள்வாங்கப்பட்டார்கள். சபரகமுவ பல்கலைக்கழக வைத்திய பீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மொறட்டுவ பல்கலைக்கழகத்திலும் வைத்திய பீடத்தை ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகக் கல்வியைப் பரவலாக்குவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்நாட்டின் 17அரச பல்கலைக்கழகங்களும் வெளிநாட்டின் முதற்தரப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பரஸ்பர கல்வி செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளன.
அத்துடன் பேராசிரியர்கள், கலாநிதிகள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மற்றும் பல்கலைக்கழகம் சார்ந்த அனைவரும் சுதந்திரமாக விரிவுரை மற்றும் பல்கலைக்கழக நடவடிக்கைகளில் ஈடுபடலாம், அரசாங்கம் என்றும் அவர்களின் பல்கலைக்கழக செயற்பாடுகளில் இடையூறு செய்வதில்லை என்றும் உயர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த மேலும குறிப்பிட்டார்.