பாடசாலை மாணவிகளுக்கு செனிட்டரி நப்கின்களை இலவசமாக கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்கும் ஆரம்ப நிகழ்ச்சி இன்று (06) நாவல ஜனாதிபதி பெண்கள் கல்லூரியில் இடம்பெற்றது.
பாடசாலைகளில் கற்றல் – கற்பித்தல் செயல்முறையை வெற்றிகரமாகப் பேணுவதற்கு இன்றியமையாத காரணியான மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமான நல்வாழ்வுக்கு உதவும் வசதிகளை வழங்கும் நோக்கத்துடன் கல்வி அமைச்சு இந்த நப்கின் வழங்கும் சுகாதாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
அனைத்து பாடசாலைகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடக்கம் 06 மாதங்களுக்கு செனிட்டரி நப்கின்களை கொள்வனவு செய்வதற்கான இலவச வவுச்சர்களை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ஒரு மாணவிக்கு ரூ. 1,200 பெறுமதியான வவுச்சர் வழங்கப்படவுள்ளதுடன், பாடசாலைகள் ஊடாக மாணவிகளுக்கு வவுச்சரை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு ஏற்கனவே ஏற்பாடு செய்துள்ளது.
இந்த வவுச்சரைப் பயன்படுத்தி, செனிட்டரி நப்கின்களை கல்வி அமைச்சால் பதிவு செய்யப்பட்ட வர்த்தக நிலையத்தில் இருந்து மாணவிகள் கொள்வனவு செய்யலாம். சுகாதாரமானவை என இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட செனிட்டரி நப்கின்களை கொள்வனவு செய்வது மாணவிகளின் பொறுப்பாகும். மாணவிகளுக்கு வழங்கப்படும் அந்தந்த வவுச்சர் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.
இது ரூ. இது 600.00 மதிப்புள்ள ‘A’ மற்றும் ‘B’ ஆகிய இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளதுடன் ‘A’ பகுதியை முதலில் பயன்படுத்த வேண்டும் என்பதுடன் அதன் செல்லுபடியாகும் காலம் 10.06.2024 – 10.07.2024 வரை ஆகும்.
மற்றைய பகுதியான ‘B’ 01.09.2024 – 30.09.2024 இடைப்பட்ட காலம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் செனிட்டரி நப்கின்களை மாணவிகள் கொள்வனவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.