பாகற்காய் என்று கூறினாலே, கசப்பு மட்டும்தான் நினைவுக்கு வரும்.
இதன் கசப்புச் சுவையின் காரணமாகவே பல பேர் இதை விரும்புவதில்லை. ஆனால், கசப்பாய் இருக்கும் பாகற்காயில் நிறைய மருத்துவ குணங்களும் சத்துக்களும் அடங்கியுள்ளது.
சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காயில் ஜூஸ் செய்து குடித்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். இதை குழந்தைகளும் குடிக்கும்படி செய்து கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
இனி கசப்பு இல்லாமல் பாகற்காய் ஜூஸ் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்…’
image – Yummy Tummy Aarthi
தேவையான பொருட்கள்
பாகற்காய் – 3
தேன் – 2 கரண்டி
மாங்காய் – 1 (சிறியது)
எலுமிச்சை பழம் – பாதி
இஞ்சி – சிறிய துண்டு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
எவ்வாறு செய்யலாம்?
முதலாவதாக பாகற்காயை நன்றாகக் கழுவி, தோல் மற்றும் விதைகளை நீக்கி, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர் எலுமிச்சைப் பழத்தின் சாறையும் இஞ்சியை இடித்து அதிலிருந்து சாறையும் எடுத்துக் கொள்ளவும்.
இதற்கிடையில் மாங்காயின் விதையை எடுத்துவிட்டு, அதை பொடியாக துருவி எடுத்துக் கொள்ளவும்.
தற்போது, ஒரு மிக்ஸி ஜாரில் பாகற்காய் துண்டுகளுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் மாங்காய் துருவல், எலுமிச்சைச் சாறு, இஞ்சிச் சாறு என்பவற்றுடன் சிறிது தண்ணீர் கலந்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த இந்தக் கலவையை பாகற்காய் சாறுடன் கலந்து, தேவையான அளவு உப்பு மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
சத்துமிக்க பாகற்காய் ஜூஸ் தயார்.