இவ்வருடம் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் போது ஏதேனும் ஒரு பிரதேசத்தில் அனர்த்த நிலைமை ஏற்பட்டால் பரீட்சை பரீட்சார்த்திகள் பாதிக்கப்படாத வகையில் தேவையான பின்னணியை தயார்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து இது தொடர்பான பூர்வாங்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை மே 29ஆம் திகதி முதல் ஜூன் 8 ஆம் திகதி வரை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த காலப்பகுதியில் மழை அதிகரிக்கும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ளும் வகையில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி எந்தவொரு பிரதேசத்திலும் அனர்த்த நிலைமை ஏற்பட்டாலும் பரீட்சையை நடாத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு 12 மணி தொடக்கம் பரீட்சை முடியும் வரை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பான கல்வி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.