கம்பஹா – தக்ஷிலா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை கடமையில் ஈடுபட்டிருந்த பரீட்சை மண்டப பொறுப்பதிகாரி மற்றும் மேலதிக பொறுப்பதிகாரி ஆகியோர் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பரீட்சை மண்டபத்தில் பரீட்சைக்கு தோற்றிய இரு பரீட்சாத்திகளுக்கு இரண்டாம் பகுதி வினாத்தாளினை வழங்காமையின் காரணமாகவே அவர்கள் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.
இதன் தொடர்பாக சித்திரக்கலை பரீட்சை இடம்பெற்ற அன்றைய தினம் இரு பரீட்சாத்திகள் மாத்திரமே குறித்த பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். இவர்கள் இருவருக்கும் மேற்கூறப்பட்ட அதிகாரிகள் பகுதி ஒன்றுக்கான வினாத்தாள்களை மாத்திரமே வழங்கியுள்ளனர்.
பரீட்சாத்திகள் கூறிய போதிலும் இரண்டாம் பகுதி வினாத்தாள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்று பரீட்சை திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளனர். எவ்வாறிருப்பினும் பகுதி இரண்டிற்கான வினாப்பத்திரத்தை வழங்குமாறு குறித்த இரு அதிகாரிகளுக்கும், பரீட்சைகள் திணைக்களத்தினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
எனினும் அவர்கள் கவனயீனமாக செயற்பட்டுள்ளனர், என்பதால் அவர்களுக்கு பரீட்சை கடமைகளில் ஈடுபடுவதற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனுபவம் மிக்க அதிகாரிகள் இவ்வாறான தவறுகளை இழைப்பதை அனுமதிக்க முடியாது. குறித்த இரு பரீட்சாத்திகளுக்கும் சித்திரக்கலை பாடத்திற்கான இரண்டாம் பகுதி வினாத்தாளை வழங்குவது குறித்து விசேட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.