அமைச்சர் சமல் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை நாடாளுமன்றத்தில் தாக்க முயற்சித்த போது, அவர் தப்பியோடியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சி (Tissa Kutty Arachchi) தெரிவித்துள்ளார்.
கொழும்பு நாராஹென்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அப்போது தான் உட்பட சிலர் சபை நடுவுக்கு வந்து பொன்சேகாவை காப்பாற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அன்று நாடாளுமன்றத்தில் தாக்குதலில் இருந்து தப்பிக்க தப்பியோடிய சரத் பொன்சேகா, தற்போது தமது கட்சியினருக்கு முன்னால் வீரனை போல் பேசி வருகிறார் எனவும் குட்டியராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஒரு முறை நடந்த விவாதத்தின் போது, அமைச்சர் சமல் ராஜபக்சவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது சமல் ராஜபக்ச சண்டையிட வருமாறு சரத் பொன்சேகாவை பார்த்து கூறினார். இதற்கு பதிலளித்த சரத் பொன்சேகா, வயதான நபரை தான் தாக்கினால், அவர் சொத்து போவார் எனவும் தான் கொலையாளியாக மாற விரும்பவில்லை எனவும் கூறினார்.