இலங்கை சுற்றுப்பயணத்தின் மூலம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நமது அண்டை நாடுகளுடனான கடல் சார் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, இந்த நாடுகளுடனான சீனாவின் ஆதிக்கத்துக்கு ‛செக்’ வைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாள் சுற்றுப்பயணமாக மாலத்தீவு சென்றார். அங்கிருந்து நேற்று முன்தினம் இலங்கை தலைநகர் கொழும்பு சென்றடைந்தார்.
இந்த பயணத்தின்போது முதற்கட்டமாக ஜெய்சங்கர், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சே, பிரதமர் மஹிந்த ராஜபக்சே ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா தரப்பில் இருந்து உதவி செய்வதாக அவர் உறுதி அளித்தார்.
மேலும் இலங்கையின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே, உயர்மட்ட குழுக்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக ஜெய்சங்கர் உறுதி அளித்தார். முன்னதாக இந்த மாத துவக்கத்தில் இவர்கள் 2 பேரும் டெல்லியில் சந்தித்து பேசினர்.
அப்போது இந்தியா, இலங்கைக்கு உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வாங்க 1 பில்லியன் டாலர் கடன் வழங்கியது. மேலும் தற்போதைய சுற்றுப்பயணத்தின்போது இலங்கையின் எரிபொருள் நிலைமை குறித்தும் ஜெய்சங்கர் ஆய்வு செய்தார்.
இதுபற்றி அவர் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான இந்திய எல்ஓசி (கடன் வரி) இலங்கை மக்களின் வாழ்க்கைக்கு உதவுகின்றது என அவர் ட்வீட் செய்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக அவர் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீஎல் பீரிஸை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி(BIMSTEC) உறுப்பு நாடுகளின் மூத்த அதிகாரிகளையும் அவர் சந்தித்து பேச உள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெறும் பிம்ஸ்டெக் அமைச்சர்கள் கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்கிறார். அதன்பிறகு பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பூடான், மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அண்டை நாடுகளாக உள்ள இவற்றின் இடையே பொருளாதார ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.டெல்லியில் சந்திப்பு
இலங்கை தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. மின்வெட்டுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் தொழில்துறை பாதித்துள்ளது. இந்நிலையில் தான் இதற்கிடையில், இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி.ஆனந்த நாகேஸ்வரன், இந்தியாவுக்கான இலங்கை உயர்கமிஷனரை மிலிந்த மொரகொடவை டெல்லியில் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பொருளாதார பங்களிப்பு குறித்த அம்சங்களை விவாதித்தனர்.
மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். சீனாவின் ஆதரவு அதிபராக கருதப்பட்ட இவர் 2018 ல் நீக்கம் செய்யப்பட்டார். ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தான் மாலத்தீவின் தற்போதைய அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ்வை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
அப்போது இருநாடுகளுக்கு இடையேயான சமூக பொருளாதார மேம்பாடு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், இந்தியா சார்பில் மாலத்தீவில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இந்தியாவால் கட்டப்பட்ட மாலத்தீவு போலீஸ் அகாடமி, போதைப்பொருள் தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.
இதுகுறித்து டிப்ளோமேட் ராஜீவ் பாட்டியா கூறுகையில், “மாலத்தீவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் சுற்றுப்பயணம் இருதரப்பு நாடுகளின் திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்லும்.
மேலும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கும் இந்த சந்திப்பு BIMSTEC மாநாட்டில் முக்கிய பங்களிப்பு செய்யும். இந்தியா புத்திசாலித்தனமாக மாநாட்டை வழிநடத்த வேண்டும். மாலத்தீவு, இலங்கை என 2 பயணங்களும் நமது வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை” என்றார்.
இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, மாலத்தீவு ஆகியவற்றில் சீனாவின் ஆதிகம் முன்காலத்தை விட தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவுக்கான கடல்சார் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் தான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அடுத்தடுத்து மாலத்தீவு, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் இருநாடுகளுக்கும் உதவி செய்து நல்லுறவை அதிகரிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார். இது இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, இருநாடுகளிலும் சீனாவின் தலையீட்டுக்கு செக் வைக்கும் முயற்சி என கூறப்படுகிறது.