நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருக்கும்போது அவரை கைதுசெய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டது.
இன்று பாராளுமன்ற அமர்வு இருப்பதாக நீதிமன்றத்திற்கு அறிவித்த போதும் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சபையில் குறிப்பிட்ட அர்ச்சுனா எம்.பி, இதனால் தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறினார்.
பிடியாணை பிறப்பிப்பது மோசமான முன்னுதாரணம் – சஜித் பிரேமதாச
அர்ச்சுனாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர் விவாதமொன்றில் கலந்துகொண்டிருக்கும்போது அவரை கைதுசெய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பது மோசமான முன்னுதாரணம் என்று குறிப்பிட்டார்.
பிரதியமைச்சர் சுனில் வட்டகல இதன்போது குறுக்கிட்டு, பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் விசேட தேவைகள் இருந்தால் தவிர அவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி எம்.பி சுஜீவ சேனசிங்க கருத்து வெளியிட்டு , இது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பொதுவான பிரச்சினையென்றும் இது குறித்து பொதுவான தீர்மானமொன்றை பாராளுமன்றம் எடுக்க வேண்டுமென்றும் கூறினார்.
இன்னிலையில் இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றம் உரிய கவனத்தை செலுத்துமென பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி உறுதி வழங்கினார்.
கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது

