கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தமது ஆதரவை கோரி, தன்னை சந்தித்த மூன்று பிரதான ராஜபக்சவினர் (Rajapaksa) குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Srisena) தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்த ராஜபக்சவினரை மைத்திரிபால சிறிசேன ஒன்று, இரண்டு மற்றும் மூன்று என வரிசைப்படுத்தியுள்ளார்.
எனினும் அவர்களின் பெயர்களை அவர் வெளியிடாது தவிர்த்துக்கொண்டுள்ளார். தன்னை சந்திக்க வந்த ராஜபக்சவினர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இல்லாமல், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால், சுதந்திரக் கட்சியின் ஆதரவை கோரியதாகவும் மைத்திரி குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு (Gotabaya Rajapaksa) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
எனினும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஒரு வாரம் செல்லும் முன்னர் புரிந்துணர்வு உடன்படிக்கையின் உடன்பாடுகள் மீறப்பட்டன எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜனாதிபதி பதவிக்கு வந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் தமது கட்சியுடன் செய்துக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் எந்த உடன்பாடுகளையும் நடைமுறைப்படுத்தவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தன்னை சந்தித்த ராஜபக்சவினரின் பெயர்களை வெளியிடாத போதிலும் அவர்கள் கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரே என அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.