மட்டக்களப்பு வாவியின் பெரும்பாலான நீர்ப்பரப்பு “பூங்கறை” எனும் ஒருவித பச்சைப் படையால் சூழப்பட்டுள்ளதால் மட்டக்களப்பைச் சூழ அமைந்துள்ள மட்டக்களப்பு நெடுவாவி மாசடைந்து வரும் நிலையில் இதன் காரணமாக சில இடங்களில் துர்நாற்றம் வீசுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் வாவியில் வலைவீசி மீன் பிடிக்க முடியாமலுள்ளதாகவும் இந்தப் “பூங்கறை”யில் ஒரு வித பசைத் தன்மை உள்ளதால் அதில் வலைகள் ஒட்டிக் கொள்வதாகவும் மீனவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
பாதிப்பு
வருடாவருடம் இத்தகைய “பூங்கறை” எனும் பச்சை படர்தல் வாவியின் மேற்பரப்பில் சில நாட்களுக்குப் படர்ந்து பின்னர் இயற்கையாகவே மறைந்து விடுவதாகவும், ஆனால் இந்த வருடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்தப் “பூங்கறை” பச்சைப் படலம் வாவியின் மேல் படரத் தொடங்கி இன்னமும் அது மறையவில்லை என்றும் மீனவர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்ந்து நீடிக்குமானால் இயற்கைக்கும் நீர் வாழ் உயிரினங்களுக்கும் அதன் விளைவாக மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் மீனவர்கள் அச்சப்படுகின்றனர்.