கொழும்பு பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் பொலிஸ் அத்தியட்சகர் நாலக சேனாநாயக்கவை தாக்கி அவரிடமிருந்த கைத்துப்பாக்கியை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் 18 வயதுடைய இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மாளிகாவத்தையில் வைத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதன்போது சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட கைத்துப்பாக்கி, துப்பாக்கி, தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடல் பிரதேசத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, சந்தேக நபர் உள்ளிட்ட குழுவினர் பொலிஸ் அத்தியட்சகர் நாலக சேனாநாயக்கவின் உத்தியோகபூர்வ வாகனம், மற்றுமொரு உத்தியோகபூர்வ வாகனம் மீது தாக்குதல் நடத்தி பலத்த சேதங்களை ஏற்படுத்தியிருந்ததாக கூறப்படுகின்றது.
இது தொடர்பான விசாரணைகளின்போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் கைதான சந்தேக நபர் வர்த்தகர் எனவும் அவரை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.