சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பாக அந்த நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
எனினும் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பிய கடிதத்தில் பயிற்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு நிதியத்தின் பிரதிநிதிகளை வரவழைப்பது தொடர்பான விடயமே அடங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா(Harsha De Silva) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நிதியமைச்சர் சந்திரனுக்கு செல்ல போவதாக கூறும் போது இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கப்ரால் சூரியனுக்கு செல்வதாக கூறுகிறார்.
கடனை மறுசீரமைப்பது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை கோரி கடிதம் மூலம் தெரியப்படுத்தியதாக நிதியமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
அதன் பின்னர் நிதியத்தின் குழு ஒன்று இலங்கை வரவுள்ளது எனவும் தெரிவித்தார். ஆனால், அப்படி எதனையும் செய்யவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கப்ரால் கூறுகிறார்.
என்னிடம் அந்த கடிதம் இருக்கின்றது. பயிற்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு வருமாறு அந்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் பொருளாதாரம் மற்றும் அரச நிதி சம்பந்தமாக நிதியமைச்சு பயிற்சித் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளது.
அந்த பயிற்சிக்கு பிரதிநிதிகளை அனுப்ப முடியுமா என்றே கேட்டுள்ளனர். இந்த பயிற்சித் திட்டம் தெற்காசிய நாடுகளுக்கான பயிற்சித் திட்டத்தின் நீட்சியாக இலங்கையில் நடைபெறுகிறது.
அத்துடன் பயிற்சித் திட்டத்தில் கலந்துக்கொள்ளும் விரிவுரையாளர்களுக்கு ஜப்பான் அரசு கட்டணங்களை செலுத்த உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. என்ன கூறுகின்றனர் என்பது எவருக்கும் தெரியாது எனவும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்