இறக்குமதிக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ள அத்தியாவசியமற்ற பொருட்களை நாட்டிற்கு இரகசியமாக கொண்டு வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொருட்களை இரகசியமாக கொண்டுவந்தால் அவற்றை பறிமுதல் செய்வது அல்லது மீள் ஏற்றுமதி செய்வது என்ற கடுமையான முடிவை இலங்கை சுங்கத்துறை எடுத்துள்ளது.
முன்னதாக இவ்வாறு நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பொருட்களை அபராதம் விதித்து விடுவிக்க சுங்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. எனினும் இனிமேல் அவ்வாறு செய்யக்கூடாது என சுங்கத்துறை உறுதியான தீர்மானத்தை எடுத்துள்ளது.
இடைநிறுத்தப்பட்ட பொருட்களுக்கு அனுமதி இல்லை
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதற்கு முன்னர் பணம் செலுத்தப்பட்டிருந்தால், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த கால அவகாசம் தற்போது முடிவடைந்துள்ளது. இந் நிலையில், இலங்கை சுங்கத்துறை கடுமையான தீர்மானங்களை எடுக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி வெளிநாட்டு உத்தியோகபூர்வ கையிருப்பை பாதுகாப்பதற்காக திறந்த கணக்கு முறையின் கீழ் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு வழங்கப்பட்ட இடத்தை துஷ்பிரயோகம் செய்யும் எவருக்கும் எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.